டால்பின் என்பது, உங்கள் வட்டுகள், USB சாதனங்கள், மற்றும் SD அட்டைகள் போன்றவற்றின் உள்ளடக்கத்தை பார்க்க உதவும் கே.டீ.யீ.யின் கோப்பு உலாவியாகும். கோப்புகள் மற்றும் அடைவுகளை எளிதாகவும் வேகமாகவும் உருவாக்க, நகர்த்த, மற்றும் நீக்க முடியும்.
உங்கள் நேரத்தைச் சேமிக்கும் பல அமசங்களை டால்பின் கொண்டுள்ளது. பல கீற்றுகளையோ துண்டாக்கப்பட்ட காட்சிமுறையையோ கொண்டு ஒரே நேரத்தில் பல அடைவுகளில் உலாவலாம். மேலும், காட்சிகளுக்கிடையே கோப்புகளை இழுத்துப் போடலாம். டால்பினின் வலது-க்ளிக் பட்டியில் சுருக்குதல், பகிர்தல், மற்றும் நகலெடுத்தல் போன்ற பல செயல்கள் உள்ளன. மேலும், உங்களுக்கு விருப்பமான செயல்களை நீங்கள் வலது-க்ளிக் பட்டியில் சேர்க்கலாம்.
டால்பின் மிகவும் சிக்கனமானது, ஆனால் அதே நேரத்தில், உங்கள் தேவைகளுக்கேற்ப அதை மாற்றி அமைக்கலாம். அதாவது, நீங்கள் விரும்பும் விதத்திலெயே உங்கள் கோப்புகளை நீங்கள் நிர்வகிக்கலாம். டால்பின் மூன்று காட்சிமுறைகளை ஆதரிக்கும்: சாதாரணமான காட்சிமுறை, அதைவிட விவரமான காட்சிமுறை, மற்றும் கிளைப்பட (tree) காட்சிமுறை. டால்பினின் நடத்தையின் பெரும்பாலான அம்சங்களை நீங்கள் மாற்றலாம்.
இணையத் தேக்கக (cloud storage) சேவைகளிலோ தொலைக் கணினிகளிலோ உள்ள கோப்புகளை, உங்கள் கணினியில் இருப்பது போல டால்பினால் காட்ட முடியும்.
தற்போதைய அடைவில் நீங்கள் விரும்பும் கட்டளைகளை இயக்க உதவும் உள்ளமைந்த முனையத்தை டால்பின் கொண்டுள்ளது. பல ஆற்றல்மிக்க செருகுநிரல்களைக் கொண்டு நீங்கள் டால்பினின் இயலுமைகளை உங்கள் தேவைக்கேற்ப மேம்படுத்தலாம். உதாரணத்துக்கு git ஒருங்கிணைப்பு செருகுநிரலைக் கொண்டு git repo-களை நீங்கள் கையாளலாம், அல்லது Nextcloud செருகுநிரலைக் கொண்டு உங்கள் கோப்புகளை இணையத்தில் ஒத்திசைக்கலாம்.