வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களுக்கான உங்கள் அட்டவணையை திட்டமிடவும் எளிதாக கண்காணிக்கவும் உதவும் அழகிய கருவியாக GNOME நாள்காட்டி உள்ளது. உங்கள் மாதங்கள் கூட்டங்கள், சந்திப்புகள், பொது நிகழ்வுகள், பயணத் திட்டங்கள் அல்லது வாழ்க்கையின் பிற பொறுப்புகளால் நிரம்பியிருந்தாலும், அவற்றை ஒழுங்காக நிர்வகிக்க இது உதவுகிறது.
GNOME நாள்காட்டியின் தொடர்ச்சியான மாதப் பார்வை, வார நேர அட்டவணை மற்றும் திட்டமிடல் பட்டியல் பார்வை ஆகியவற்றின் மூலம், வரம்பில்லா நாள்காட்டிகள் மற்றும் நிகழ்வுகளை எளிதாக உருவாக்கி நிர்வகிக்கலாம்.
சமீபத்திய GNOME தொழில்நுட்பங்களும் வடிவமைப்பு சிறந்த நடைமுறைகளும் இணைக்கப்பட்டு, பெருமளவு நிகழ்வுகளை நிர்வகிக்கவும் பிற பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பை வழங்கவும் முதிர்ந்த Evolution தரவு சேவையகத்தின் மீது GNOME நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது. NextCloud, Google Calendar, CalDAV / WebDAV சேவையகங்கள் போன்ற பல்வேறு ஆன்லைன் நாள்காட்டி சேவைகளிலிருந்து நாள்காட்டிகளைச் சேர்த்து, உங்கள் நிகழ்வுகளை பல சாதனங்கள் மற்றும் தளங்களில் ஒத்திசைக்கலாம். மேலும், GNOME நாள்காட்டி உள்ளூர் மற்றும் இணையமில்லா நாள்காட்டி பயன்பாட்டையும் ஆதரிக்கிறது; எனவே பயணத்தின் போது (அல்லது நாகரிகம் முற்றிலும் சரிந்த பிறகும் 😉) எங்கும் எப்போது வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம்.